”நான் நல்லெண்ணத்துடன் எடுத்திருக்கும் ரிஸ்க்!’’ - சி.மகேந்திரன்

சி. மகேந்திரன்
சி. மகேந்திரன்
Published on

இந்திய கம்யூனிஸ்ட் கட்சியில் நீண்டகாலம் பணியாற்றிய மூத்த தலைவர் சி.மகேந்திரன் சிவப்புத் துண்டுடன் தவெகவில் இணைந்தது சமீபத்திய அரசியல் ஆச்சரியங்களில் ஒன்று. சில காலமாகவே குடிமைச் சமூக இயக்கங்கள் எனச் செயல்பட்டு வந்த தோழர் சி.ம. அவர்களிடம் இது பற்றிப் பேசினோம்.

நீண்டகாலம் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியில் பணியாற்றி விட்டு திடீரென தவெகவில் இணைந்து விட்டீர்களே?

1974 ஆம் ஆண்டில் நான் முழு நேர ஊழியராக கட்சியில் சேர்ந்தபோது எனக்கு நிர்ணயிக்கப்பட்ட சம்பளம் 22 ரூபாய். அப்போது எனக்கு திருமணம் ஆகவில்லை. தஞ்சையில் உள்ள கட்சி அலுவலகத்தில் என் பயணச் செலவுகளுக்காக அதை நிர்ணயித்தார்கள். கட்சியில் முழுநேர ஊழியராக நிறைவடையும்போது எனக்குக்கொடுத்த ஊதியம் 7500 ரூபாய். இதில்தான் என் வாழ்க்கையை வாழ்ந்திருக்கிறேன். கம்யூனிஸ்ட் வாழ்க்கையில் நிறைய பயணங்கள், நெருக்கடிகள் எல்லாமே இருந்துள்ளன. அது எனக்கு மிகச் சிறந்த கல்வியையும் மற்ற விஷயங்களையும் உருவாக்கித் தந்துள்ளது. எனக்கு அதற்காக நன்றி உணர்வு எப்போதும் உண்டு. அதனால்தான் நான் தவெகவில் சேரும்போது சிவப்புத் துண்டுடன்தான் சென்று சேருவேன்; கம்யூனிஸ்ட் வாழ்க்கை முறையில்தான் வாழ்வேன் என்பதைத் தெளிவுபடுத்திக் கொண்டேன். நல்லக்கண்ணு அவர்கள், பாண்டியன் அவர்கள் பொறுப்பில் இறங்கியபிறகு அண்மைக் காலங்களில் எனக்கும் கட்சிக்கும் இடையே சில ஆழமான கருத்துவேறுபாடுகள் ஏற்பட்டன. அவை அகில இந்திய தலைமை, மற்றவர்களால் தீர்க்கப்படவில்லை. மாறாக நான் இந்திய அளவில் உள்ள 35 பேர் கொண்ட நிர்வாகக் குழுவில் இருந்தேன். அதில் இருந்து இறக்கப்பட்டு, தேசியக் குழுவில் இருந்து விலக்கப்பட்டு, மாநில மாநாடு, மாநிலக் குழு ஆகிவற்றில் இருந்தெல்லாம் எடுக்கப்பட்டு, கட்சியில் உறுப்பினராக மட்டும் இருந்தேன். நான் இதைப் பொதுவெளியில் விவாதிப்பது இல்லை. கட்சியில் இப்படி நடப்பது காலப்போக்கில் சரியாகும்; மாற்றங்கள் வரும் என்ற பொறுமையுடன் இருந்தேன். கடந்த பத்தாண்டுகளாகவே, கருத்து வேறுபாடுகள், தேர்தல், தேர்தல் சார்ந்த விஷயங்கள், தேர்தலுக்கான பணப்பரிமாற்றங்கள் ஆகியவற்றில் ஆழமான் கருத்து வேறுபாடுகள் இருந்தன. கடந்த மூன்று ஆண்டுகளாக சுத்தமாக ஒதுங்கி இருந்தேன். எந்த கூட்ட்ங்களிலும் கலந்துகொள்வது இல்லை. கடந்த தேர்தலில்கூட கம்யூனிஸ்ட் கட்சி போட்டியிடும் இடங்களில் தேர்தல் பிரச்சாரம் செய்கிறேன் எனக் கேட்டபோது எனக்கு அதற்கான அனுமதியும் இல்லை. இதெல்லாம் என் தனிப்பட்ட விஷயங்கள் என வைத்துக்கொள்ளலாம். இதனால் நான் விலகிவிட்டேனா என்றால் கிடையாது.

இதை தாண்டி என்ன நடக்கிறது என்றால் என்னுடைய மனநிலையில் வேறு காரணங்கள் உருவாயின. ஈழ விடுதலைப் போராட்ட சமயத்தில் அதில் முழுமையாக இருந்தது, அது போன்ற கருத்துகளைக் நான் கொண்டுவந்தது ஆகியவை கம்யூனிஸ்ட் கட்சியையே மண் சார்ந்த கட்சியாக மாற்ற செய்த முயற்சிகள்தான். ஆனால் கொள்கை ரீதியாக அதில் முழுவெற்றி பெற முடியவில்லை. என்னுடைய அடிப்படையான புரிதல், 1990-இல் சோவியத் யூனியன் வீழ்ச்சிக்குப் பின்னர் ஒரு புதிய அரசியல், கார்ப்பரேட் உலகமய அரசியல் உருவானது. அதற்கேற்ப கம்யூனிஸ்ட் கட்சிகள் தயாராகவில்லை. எனவே கம்யூனிஸ்ட் கருத்துகளை உள்வாங்கிய புதிய அமைப்புகள் உருவாகின்றன. லத்தீன் அமெரிக்க நாடுகளில் அப்படி நடந்திருக்கிறது. பாரம்பரிய இடதுசாரிக் கட்சிகள் மிகக் குறைவான வாக்குகளைப் பெறுகின்றன. புதிய கொள்கைகளை முன் வைப்பவர்களால் கூடுதல் வாக்கு பெற முடிகிறது. நமக்குப் பக்கத்தில் இருக்கும் இலங்கையில் அனுரா வென்றிருக்கிறார். ஆனால் பாரம்பரிய கம்யூனிஸ்ட் கட்சிகளான இலங்கை கம்யூனிஸ்ட் கட்சி, சமசமாஜ கட்சி ஆகியவை காணவில்லை என்ற நிலையை அடைந்துள்ளன. ஆக புதிய அரசியல் மாற்றம் ஏற்படுகிறது.

அதில் புதிய சேர்மானங்கள் நடக்கின்றன. டெல்லியில் நடந்த விவசாயிகள் போராட்டத்தில் ஒரு மாதம் கூடாரம் ஒன்றில் தங்கி இருந்தேன். அப்போது சந்தித்த இளைஞர்கள், அவர்களின் சிந்தனை வழமையான கம்யூனிஸ்ட் கட்சிகளின் சிந்தனையில் இருந்து மாறுபட்டதாக இருந்தது. அதேபோல் இளைஞர்களிடம் புதிய சிந்தனையும் எழுச்சியும் ஏற்படும்போது அது அமைப்பாக்கம் பெற என்னைப் போன்ற் மூத்தவர்கள் பங்களிக்க வேண்டும், அது கடமை எனத் தோன்றியது.

இன்று இளைஞர்கள் பெரிதும் பங்களிக்கும் இயக்கமாக தமிழக வெற்றிக் கழகம் இருக்கிறது. அவர்களின் வருகையைப் பற்றி எனக்கு விமர்சனம் இருந்தது. பொதுவெளியில் அதைச் சொல்லியும் இருக்கிறேன்.

அந்த விமர்சனங்களை வைத்த நான், இந்த தேர்தல் முடிவுக்குப் பின்னால் இதுவரைக்கும் பணபலத்தால் மட்டுமே வெற்றிபெற முடியும் என்று அமைந்திருந்த கட்டுமானத்தை எது உடைத்தது என யோசித்துப் பார்த்தேன். இது புதிய அரசியலுக்கான பெரிய மாற்றம். அந்த மாற்றத்துடன் விஜய் அவர்களின் அரசியல் பின்னிப் பிணைந்திருக்கிறது. இதை நான் மிக முக்கியமானதாக கருதுகிறேன்.

இதை முன்கூட்டியே உணரத் தவறிவிட்டீர்கள் எனக் கொள்ளலாமா?

அதை ஒரு படிப்பினையாகக் கொள்கிறேன். அதை ஒரு விமர்சனமாக ஏற்றுக் கொள்கிறேன். எல்லோராலும் கணிக்க முடியவில்லை. என்னாலும் கணிக்கமுடியவில்லை. பிறகு அதைக் காணும்போது பெரிய ஊழல் சாம்ராஜ்யங்கள், ஓட்டுக்கு 5000 கொடுத்தவர்கள் எல்லோரும் தோற்றுப் போய், சாதாரணமான, வெளியே தெரியாத ஏதோ ஒன்று வெற்றி பெறுகிறது என்றால் மக்கள்சகதி மாற்றத்தை விரும்புகிறது என உணர்ந்தேன். இதையும் இது தொடர்பான ஆய்வுகளையும் உற்றுப் பார்க்கிறபோது அரசியலில் இது மாற்றம் நிகழும் காலம்; இம்மாற்றம் சரியான மாற்றம். கம்யூனிஸ்ட் கட்சிகளாலோ இதுவரை தமிழ்நாட்டின் நேர்மையாளர்களாலோ செய்ய முடியாத ஒரு விஷயத்தை மக்கள் ஏதோ ஒரு சூழலில் செய்துள்ளனர். அது வலிமை பெறவேண்டும். அதற்காக ஒரு நபர் அல்லது வேறு நபர்களைக் காரணம் காட்டி மீண்டும் நாட்டைப் பள்ளத்துக்குள் தள்ளிவிடக் கூடாது. அந்த கழிவு குட்டைகளில் ஆட்சி விழுந்திடக் கூடாது. இது கொஞ்சம் புதிதாக இருந்தாலும் தமிழ்நாட்டில் இருக்ககூடிய நல்ல ஆரோக்கியமான நெறிசார்ந்த அரசியல்வாதிகளை நம் மூலமாக கொஞ்ச்ம் திரட்டி, இவர்களையும் அந்த சரியான பாதையில் செலுத்த ஏதாவது ஒன்றை செய்ய நினைத்தேன். இந்தச் சிந்தனையின் வெளிப்பாடுதான் நான் சென்றிருப்பது. இத்தனை ஆண்டு காலம் கம்யூனிஸ்ட் கட்சியை நேசித்த ஒருவர் புதிதாகத் தோன்றிய ஒரு இயக்கத்தில் திடுதிப்பென்று கண்ணை மூடிக்கொண்டு இணைந்தாரே என்று மற்றவர்களுக்கு உணர்வு ஏற்படும் என்பதை நான் அறிவேன்.

ஆனால் ரிஸ்க் என்று சொல்வார்களே, அதைத்தான் நான் நல்லெண்ணத்துடன் எடுத்துள்ளேன். வெகுகாலமாக என்னுடன் இருக்கும் நண்பர்கள் என்னை விமர்சிப்பார்கள் என்று தெரியும். நானும் ஒரு சாமியார் மாதிரி சிவப்புத் துண்டைப் போட்டுக்கொண்டு ஒரு ஓரத்தில் அமர்ந்து அந்த காலத்தில் இது ஒரு நல்ல மடமாக இருந்தது; நல்ல ஆட்களாக இருந்தார்கள், என முடித்துக்கொள்ளலாம். ஆனால் என்னால் அது முடியவில்லை. புதிய பரிசோதனைகளைச் செய்துபார்க்கக் கூடிய என்னுடைய இயல்பு அதற்கு அனுமதிக்காது.

இவ்வளவு பெரிய கூட்டம் இருக்கிறதே; அதில் முதல்வர் விஜய் அமைதியாக இருக்கிறார். அவர் பாத்திரம் வித்தியாசமாக இருக்கிறது. ஆட்சிக்கு வந்த உடனே அவர் அதைச் செய்வேன் இதைச் செய்வேன் என கையில் வாளெடுத்து சாலையில் சுற்றிக் கொண்டு இராமல் அமைதியாக அமர்ந்து சாராயக் கடையை மூடுவதில் தொடங்கி, பல விஷயங்கள்.. ஊழல் ஒரளவுக்குக் கட்டுப் படுத்தப் பட்டிருக்கிறது; மேல் மட்டத்தில் அரசு அதிகாரிகளும் மற்றவர்களும் வாங்கும் லஞ்சம் நிறுத்தப்பட்டிருக்கிறது என்ற செய்தி கிடைக்கிறது. இது நாட்டுக்குத் தேவையான புதிய இளைஞர் சக்தி என்கிற உணர்வு எனக்கு ஏற்படுகிறது. ஏன் அதற்கு நாம் இணைந்து நம் அனுபவத்தை அளித்து ஆதரிக்கக் கூடாது என்ற எண்ணத்தில்தான் இந்த முடிவை எடுத்தேன்.

நீங்கள் தவெகவில் இணைந்தபின்னர் கட்சி நடவடிக்கைக்கு உள்ளாக்கப்பட்டவர்கள்; என்சிபிஎச் நிறுவனத்தைக் கைப்பற்ற முயன்ற மோசடியாளர்கள் பக்கம் நின்றவர் என்று சிபிஐ கட்சி அறிக்கை வெளியிட்டது. அது பற்றி?

என்சிபிஎச் என்கிற நிறுவனம் என்பது அடிப்படையில் கட்சி நிறுவனம் அல்ல. கம்பெனி சட்டப்படி பதிவு செய்யப்பட்ட நிறுவனம். ஆரம்ப காலத்தில் கம்யூனிஸ்ட் தலைவர்கள் நூல்களைத் தோளில் சுமந்து விற்று அந்நிறுவனத்தை உருவாக்கினார்கள். அந்நிறுவனத்தில் நல்லக்கண்ணு, தா. பாண்டியன் ஆகியோரின் பங்குகள்தான் நம்பிக்கை அடிப்படையில் அதிகமாக இருந்தன.

நான் அதில் உறுப்பினரோ எதுவோ இல்லை. அதில் பொறுப்பில் இரண்டு பேர் இருந்தார்கள். அவர்கள் தஞ்சாவூர்காரர்கள். நானும் தஞ்சை மண்ணைச் சேர்ந்தவன். இதைத் தவிர எந்த உறவும் இல்லை. என்சிபிஎச்-இல் ஒரு பிரச்னை இருந்தது. அதை அவர்கள் தீர்த்த விதம் வேறானது. அதில் துளியும் தொடர்பில்லாத என்னை கொண்டுவந்து சிக்கவிடுகிறார்கள். அதற்குக் காரணம் நான் கட்சிக்குள் இருப்பதை விரும்பாத சிலர் இதனுடன் என்னை இணைத்துப் பேசினர். நான் கட்சிக்குள் நின்று புகார் அனுப்பி, நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்வது போல், ஒரு குற்றச்சாட்டில் மாட்டினால் பத்து ஆண்டுகள் வழக்கு நடக்கும் பாருங்கள் அதுபோன்ற குற்றச்சாட்டில் என்னைக் கொண்டுபோய் நிறுத்தினார்கள். நான் இதெல்லாம் நமக்கு வேண்டாம் என ஒதுங்கிவிட்டேன். அச்சமயம் நிகழ்ந்த இந்த அரசியல் மாற்றத்தில் நாமும் கலந்துகொண்டால் என்ன எனத் தோன்றியதால் நான் தவெகவில் சேர்ந்தேன். இந்த அறிக்கையைப் பார்த்ததும் எனக்குப் பெரிய வருத்தம்தான். என்ன செய்வது தாய் தந்தையருக்கே பிள்ளைகள் சில சமயம் கெடுதல் செய்கிறார்கள். அதே மாதிரி கட்சிக்குள் நிலைமை ஆரோக்கியமானதாக இல்லை. எனக்கு மிக மரியாதைக்குரிய கட்சி அது. அதற்குள் நடக்கும் விசயங்கள் எனக்கு வருத்தம் அளிக்கின்றன். அக்கட்சியில் விசுவாசத்துடன் இருக்கும் அடுத்த தலைமுறையினர் அந்த குறைபாடுகள் இல்லாமல் கட்சி்யை வளர்த்தால் வெளியே இருந்து நான் மகிழ்ச்சியுடன் வாழ்த்துத் தெரிவிப்பேன். இதைத்தாண்டி பேசுவது எனக்கு அழகாகத் தோன்றவில்லை. கம்யூனிஸ்ட் நெறிகளுக்குப் புறம்பாக பல நிகழ்வுகள் நடந்தன. இதை மட்டுமே பேட்டியில் சொல்ல விரும்புகிறேன்.

த.வெ.க.வில் இணைந்துள்ளீர்கள்… கட்சியில் என்ன எதிர்பார்க்கிறீர்கள்?

எந்த எதிர்பார்ப்பும் இல்லை. ஆனால் இளைஞர்களை ஜனநாயக அரசியலில் தயார்ப்படுத்தவும் இணைத்துக் கொண்டு செல்லவும் அங்கே இடம் இருக்கிறது என நினைக்கிறேன். வலிமைவாய்ந்த இளைஞர் சக்தியை சித்தாந்த தத்துவார்த்த ரீதியில் இன்றைய குடிமை அரசியலில் இணைத்துச் செல்ல என கூறலாம். தவெகவின் இணையதளத்தில் நீங்கள் சென்று பார்த்தால் நான் விரும்பும் கொள்கைகள் அதில் உள்ளன. இளைஞர்களுக்கு பயிற்சி தரவும் புதிய அரசியல் மாற்றங்களில் அவர்களுடன் நின்று உதவி செய்வதற்காகவும் இவர்கள் மீது மோசமான பழி பாவங்கள் சுமத்தப் படும்போது வலிமையாக நின்று ஆதரவாகப் பேசும் குரலாகவும் இருக்கலாம் என நினைக்கிறேன். அவர்கள் புதியவர்களாக இருப்பதால் அவர்களை சுலபமாக நகர்த்திவிடலாம் என்ற எண்ணம் இருக்கிறது பாருங்கள். இந்நிலையில் அவர்களுக்கு தத்துவார்த்த, சித்தாந்தக் கேடயமாக செயல்படணும் என்று நினைக்கிறேன்.

அந்திமழையை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர: Whatsapp

அந்திமழையைத் தொடரFacebookTwitterYoutubeInstagram

logo
Andhimazhai
www.andhimazhai.com